சாலை வசதியில்லாத மலைகிரா மங்களில் வாக்குப்பதிவு இயந்தி ரங்களை கொண்டுசெல்ல கழுதை களை அரசு ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி, கம்பம், பெரிய குளம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளத்தை தவிர போடி, ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய 3 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களும், 150-க்கும் மேற்பட்ட குக்கிராமங் களும் உள்ளன. பல மலைகிரா மங்கள் அடர்ந்த வனப்பகுதி யில் உள்ளதால், இப்பகுதியில் சாலைகளை அமைக்க வனத் துறை தடை விதித்துள்ளது. இத னால் கொலுக்குமலை, காரிப் பட்டி, சென்ட்ரல் ஸ்டேஷன், ஊரடி- ஊத்துக்குடி ஆகிய மலை கிராமங்களில் சாலை வசதி முற்றிலும் இல்லாத காரணத்தால் பாதைகள் கரடு முரடாகவும் சில இடங்களில் ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் அளவுக்கு குறுகிய பாதையாகவும் உள்ளன. இந்த 4 மலைகிராமங்களிலும் 921 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக, அதே மலைகிராமங்களில் 4 வாக் குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் கொண்டுசெல்ல முடியாததால், கழுதைகள் மூலம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கழுதைகளை வளர்ப்பவர்களை தேடும் பணியில் தேர்தல் பிரிவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘மலைகிராமங்களில் வசிக்கும் மக்களில் பலர், தேர்த லில் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இதனால், அவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, கடந்த ஒரு வார மாக மலைகிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகின்றன. சாலை வசதி இல்லாத மலைகிராம வாக்குச் சாவடி மையங்களுக்கு ஜீப் அல் லது கழுதைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது’ என்றார்.