வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசி. இவர், காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் புகாரை முறையாக வாங்காமல் அலைக் கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட் களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெப்சின் என்பவர் தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது மனைவி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அவரிடம், புகாரை வாங்காமல் பெண் காவலர் சசி அலைக்கழித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில், உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்கு பிறகு பெப்சின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெப்சின் கைது செய்யப்பட்டார்.
புகார் மனுவை வாங்காமல் அலைக்கழித்த பெண் காவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது குறித்து எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தினார்.
இதில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சசி அங்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் புகார் மனுவை வாங்காமல் அலைக்கழித்து வருவது உண்மை என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, பணியில் மெத்தனமாக செயல்பட்டு, புகார் மனுவை வாங்காமல் பொதுமக்களை அலைக்கழித்த பெண் காவலர் சசியை சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் நேற்று உத்தரவிட்டார்.
மேலும், காவல் நிலையங்களுக்கு புகார் மனுவுடன் வரும் பொது மக்களை அலைக்கழிக்கும் காவலர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.