கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 6 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கல்லுாரி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஆறு துணை மருத்துவ படிப்புகள் தொடங்க, மாநில மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 'டிப்ளமோ இன் ரேடியோ டயக்னாசிஸ்', மயக்கவியல் டெக்னீசியன், அவசர சிகிச்சை டெக்னீசியன், இ.சி.ஜி., மற்றும் டிரெட்மில் டெக்னீசியன், அறுவை சிகிச்சை அரங்க டெக்னீசியன், 'மல்டிபர்ப்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர்' என ஆறு துணை மருத்துவ படிப்புகள் தொடங்க அனுமதி அளித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கூறுகையில், "நடப்பாண்டிலிருந்து துணை மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். 'டிப்ளமோ இன் ரேடியோ டயக்னாசிஸ் படிப்புக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 3 மாத பயிற்சியும், 'மல்டிபர்ப்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர்' படிப்புக்கு ஆறு மாத படிப்பு மற்றும் 6 மாத பயிற்சியும், மீதமுள்ள நான்கு படிப்புகளுக்கு ஓராண்டு படிப்பு மற்றும் 3 மாத பயிற்சியும் அளிக்கப்படும்.
ஆறு பிரிவுகளில் மொத்தம் 70 பேர் சேர்க்கப்படுவர். மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் அறிவிப்பு வெளியான பிறகு சேர்க்கை நடைபெறும். மேலும், நர்ச்சிங் படிப்பு தொடங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்றார்.