கரூர்: ''நடிகர் சூர்யா பொதுமன்னிப்பு கேட்காதவரை எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடக் கூடாது'' என கரூர் அஜந்தா திரையரங்க மேலாளர் பழனிச்சாமியிடம் கரூர் மாவட்ட பாமக சார்பில் இன்று (மார்ச் 9ம் தேதி) கடிதம் வழங்கப்பட்டது.
நடிகர் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கரூர் மாநகரில் மட்டும் அஜந்தா உள்ளிட்ட 3 திரையரங்குகளில் நாளை (மார்ச் 10ம் தேதி) வெளியாக உள்ளது. இந்நிலையில் கரூர் அஜந்தா திரையரங்க மேலாளர் பழனிச்சாமியிடம், கரூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நா.பிரேம்நாத் தலைமையில் பாமகவினர் இன்று (மார்ச் 9ம் தேதி) மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் நா.பிரேம்நாத் செய்தியாளர்களிடம் கூறியது, ''நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் 2ம் தேதி ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இதில் மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் உண்மை பெயரில் நடிக்க, பட்டியலின கிறிஸ்தவரான உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்திரத்திற்கு மட்டும் குருமூர்த்தி என பெயர் வைத்து அதனை குரு, குரு என முன்னாள் வன்னியர் சங்க தலைவர் பெயரில் அழைத்து, வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்டி அவரை வன்னியராக சித்தரித்துள்ளனர்.
மேலும், வன்னியர்களை ஜாதி வெறியர்கள் போல சித்தரித்து வடமாவட்டங்களில் அமைதியாக வாழும் இருளர், வன்னியர் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்ப்பு எழுந்தபோது நடிகர் சூர்யா மறுப்பு தெரிவிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டார். நடிகர் சூர்யா பொதுமன்னிப்பு கேட்காமல் நடிகர் சூர்யாவின் நாளை வெளியாகும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது. பொதுமன்னிப்பு கேட்கும்வரை சூர்யா நடித்த எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அதனை வெளியிடவிடாமல் பாமக தடுக்கும்'' என்றார். ராக்கி முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.