படம்: உக்ரைன் நாட்டிலிருந்து வீடு திரும்பிய மாணவி வினோதினியை வரவேற்ற அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் 
தமிழகம்

'எல்லையைக் கடப்பது எளிதல்ல; அச்சத்துடன் பயணித்தோம்': உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய காரைக்கால் மாணவி பேட்டி

வீ.தமிழன்பன்

காரைக்கால்: சிரமம், நெருக்கடிகளுக்கு இடையே அச்சத்துடன் எல்லைப் பகுதிக்கு பயணம் செய்ததாக உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய காரைக்கால் மருத்துவ மாணவி வினோதினி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் படித்து வந்த காரைக்காலைச் சேர்ந்த மேலும் 2 மாணவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், 2 மாணவிகள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்த வந்தனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகள் சிவசங்கரி மீட்கப்பட்டு கடந்த 6-ம் தேதி காரைக்கால் வந்து சேர்ந்தார். இந்த நிலையில் திருமலைராயன்பட்டினம் குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் மகள் வினோதினி உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு, நேற்று இரவும், காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் கார்த்தி விக்னேஷ் இன்று(மார்ச் 9) காலையும் தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாக தியாகராஜன், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ் ஆகியோர் வினோதியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து உக்ரைனில் உள்ள போர் சூழல், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து மாணவியிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் நாடு திரும்பிய அனுபவம் குறித்து மாணவி வினோதினி கூறுகையில்: "போர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நிலைமை சரியில்லாதது குறித்து எடுத்துக் கூறி எங்களை மீட்குமாறு கேட்டுக்கொண்டோம். கல்லூரியில் நேரடி வகுப்புகள் இருப்பதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்திய தூதரகம் எங்களை வெளியேறுமாறு சொல்லிக் கொண்டே இருந்தது.

ஆனால் விமான டிக்கெட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. எனினும் விமான டிக்கெட் பதிவு செய்தோம். அதற்குள் போர் தொடங்கி நிலைமை சிக்கலாகி, யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதுவும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. நிறைய பேருக்கு அவர்கள் பதில் தெரிவிக்கவே இல்லை. நாங்கள் என்ன கேட்டாலும், உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்களே தவிர எதுவும் சொலவில்லை.

பின்னர் போர் மிகவும் தீவிரம் அடைந்த நிலையில், நீங்கள் எல்லையைக் கடந்து வந்துவிடுங்கள், அங்கிருந்து இந்தியா உங்களை மீட்டு அழைத்துச் செல்லும் என்று சொல்லப்பட்டது. ஆனால் எல்லையைக் கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பின்னர் ரயில் மூலம் நாங்கள் இருந்த இடத்திலிருந்து புறப்பட்டு, மிகுந்த சிரமம், நெருக்கடிகளுக்கிடையே அச்சத்துடன் எல்லைப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் இந்திய தூதரகத்தின் தேவையான உதவிகளுடன் இந்தியா வந்து சேர்ந்தோம் என மாணவி கூறினார்.

SCROLL FOR NEXT