மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று (புதன்கிழமை) காலை தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவருமே வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர வேண்டும் என்று ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்திருந்தார்.
அதற்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஆட்சியர் அனீஷ் சேகர் இன்று அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.
காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் உலகளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு மோசமாகிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மிகப்பெரிய அளவில் மாசு அடைகிறது. அதனால், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் காற்று மாசுப்படுதலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இனி வாரத்தில் புதன்கிழமையன்று அரசு ஊழியர்கள் பேருந்தில் அல்லது நடந்துதான் அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆட்சியர் அனீஸ் சேகரின் இந்த பசுமை முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அரசு ஊழியர்கள் ஆட்சியர் வேண்டுகோளை ஏற்று இன்று புதன்கிழமை பொதுபோக்குவரத்து அல்லது சைக்கிளில் அலுவலகம் வருவார்களா? , ஆட்சியினர் இந்த பசுமை முயற்சி எந்தளவுக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், இந்த பசுமை முயற்சிக்கு முன்மாதிரியாக இன்று நத்தம் சாலையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து (முகாம் அலுவலகம்) 3 கி.மீ., தொலைவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.
வழக்கமாக ஆட்சியர் அனீஸ் சேகர் அரசாங்கத்தின் இனோவா காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவார். ஆனால், இன்று ஆட்சியரே அலுவலகத்திற்கு சைக்கிளில் வருவதாக அறிந்த ஆட்சியர் அலுவகலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் சைக்கிள் மற்றும் பொதுபோக்குவரத்தைப் பயன்படுத்தி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அதுபோல் மாவட்டம் முழுவதும் மற்ற அரசு அலுவலங்களிலும் அரசு ஊழியர்கள் ஓரளவு பேருந்தில் அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். சிலர் ஆட்சியரை போல் சைக்கிளிலும் அரசு அலுவலங்களுக்கு வந்திருந்தனர்.
ஆட்சியரின் இந்த பசுமை முயற்சி சைக்கிள் பயணம் தொடர்ச்சியாக வாரந்தோறும் இருந்தால் அவரைப்பார்த்து மற்ற துறை அரசு ஊழியர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் சைக்கிள் பயணங்களை மேற்கொள்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இது குறித்து ஆட்சியர் அனீஸ் சேகர் கூறுகையில், ‘‘வாரத்திற்கு ஒரு நாளாவது அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு சைக்கிளில் வர வேண்டும். இந்த சிறு முயற்சி மற்றவர்களையும் சைக்கிள் அல்லது பேருந்தில் வர ஒரு உந்துதலை ஏற்படுத்தும். பொதுமக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.. அதனால், போக்குரவத்து செலவும் குறையும், ’’ என்றார்.