தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேரும் முடிவில் ஆரம்பம் முதலே இருந் தது. இந்த சூழலில், ஆரம்பத்தில் தமாகா கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தர அதிமுக தரப்பு மறுத்தது. ஒரு கட்டத்தில் தொகுதிகளை குறைத்துக் கொடுத் தாலும் பரவாயில்லை அதிமுகவு டன் இணைவது என்று தமாகா தரப்பு முடிவெடுத்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், இதனால் பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதன்பேரில், தேமுதிக ம.ந.கூட்டணி அணியில் சேருவதற்கான முடிவில் தமாகா உள்ளதாக தெரிகிறது. இது பற்றி தமாகா மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி சேர வேண்டுமென்று தமாகா இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜி.கே.வாசனை வலியுறுத்தினர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. இந்த சூழலில், ம.ந.கூட்டணி தேமுதிக அணியை தனது அடுத்த தேர்வாக ஜி.கே.வாசன் வைத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்.
இதுபற்றிய தகவல்களை விஜயகாந்திடம் வைகோ நேற்று தெரிவித்துள்ளார். மேலும், தமாகாவின் 2-ம் கட்ட தலைவர்கள் தேமுதிகவுடன் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவோடு கூட்டணி அமையாத பட்சத்தில் தேமுதிக - ம.ந.கூட்டணியில் தான் தமாகா இணையும்” என்றார்.
இது ஒருபுறமிருக்க, “தமாகாவின் 2-ம் கட்ட நிர்வாகிகளுடன் பாஜக பேசி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை அமைக்க ஜி.கே.வாசன் பாஜக கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறோம். உதிரிகளாக கிடந்தால் சாதிக்க முடியாது” என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறியுள்ளார்.