தமிழகம்

திறன் மேம்பாட்டுக்கழகம் பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் - ‘நான் முதல்வன் ’ திட்டத்துக்காக முதல்வர் தலைமையில் கையெழுத்தானது

செய்திப்பிரிவு

சென்னை: இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய முன்னெடுப்பாக, ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டத்தை மார்ச் 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் தனித்திறன்களை மெருகேற்றவும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டது.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார், திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யா மற்றும் பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT