சென்னை: சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழக அரசு சார்பில் காமராஜர்சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் பி.கீதாஜீவன், என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக மகளிரணி சார்பில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி, மகளிரணிச் செயலர் பா.வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலர் வைகோ, மகளிரணி மாநிலச் செயலர் டாக்டர் ரொஹையா பங்கேற்றனர்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உலக மகளிர் தின விழா மற்றும் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
சாதனை பெண்களுக்கு விருது
மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ்கட்சித் தலைவர் க.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்ச்செல்வி வசந்தகுமார், வழக்கறிஞர் சாந்தகுமாரி, பைலட் இந்திரா, சர்மா மித்ரா ஆகியோருக்கு சிறந்த பெண்களுக்கான இரும்பு மங்கை இந்திராகாந்தி விருதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் கருவூல ஒருங்கிணைப்பாளர் நர்மதாதேவி, மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி,அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அல்சிபா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
தமாகா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
ஆவின் மகளிர் நலச் சங்கம் சார்பில் விருகம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில், பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர், ஆவின் நிர்வாக இயக்குநர் என்.சுப்பையன், பால்வளத் துறை ஆணையர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி, மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் சுஜாதா ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி சார்பில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மேயர் ஆர்.பிரியா கலந்து கொண்டு, கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கேடயம் வழங்கினார். இதில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அவரது துணைவியார் மம்தா ஜிவால், கூடுதல் ஆணையாளர்கள் லோகநாதன், செந்தில்குமார், கண்ணன், தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்கள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைகளில் நடைபெற்ற விழாவில், மகப்பேறு மருத்துவர் எஸ்.கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.