தமிழகம்

ரஜினி, கமல் பங்கேற்கும் நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

செய்திப்பிரிவு

ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் 40 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 5 ஆயிரம் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், போலீஸார் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். இந்த சூழலில், நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கும் பெரும் எண்ணிக்கையில் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால் அதனால் தேர்தல் நேரத்தில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளதால் அதைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதனால் பெரும் விபரீதம் ஏற்படும். மேலும் 40 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடுவதால் அதை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள நேரிடும். எனவே இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். வழக்கின் தகுதியின் அடிப்படையில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கப்போகிறோம்” என்றனர்.

இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT