அரசு நிலம் மோசடியாக விற்கப்பட்ட வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலூர் சாம்பிராணிபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலூர் அருகே கவட்டையன் பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான 10.88 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய் யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எனது புகாரின்பேரில் பி.ஆர்.பழனிச்சாமி, தர்மலிங்கம், கருப் பணன், சந்திரன் உட்பட 9 பேர் மீது மேலவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து 9 பேரையும் மேலூர் நீதித்துறை நடுவர் விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மேலூர் டி.எஸ்பி மதுரை நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் 2015-ல் உத்தரவிட்டது. அதன் பிறகு, 12 முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மதுரை நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தேவையில்லாமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும். மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை 3 மாதத்தில் முடிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
12 முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மதுரை நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.