`திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடப்படும்’ என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ராதாபுரம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட் பாளர் மு.அப்பாவுக்கு ஆதர வாக வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை உங்கள் பகுதிக்கு கொண்டு வருவதற்காக ரூ.396 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தொடங்கினோம். அந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டார்கள். 234 தொகுதிகளிலும் நடைபயணம் சென்றபோது மாணவர்களை சந்தித்தேன்.
`திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கிடைத்தது. இன்றைக்கு நாங்கள் படிப்பதற் காக எங்களது பெற்றோர் வங்கி களில் கடன்வாங்கும் நிலையில் இருக்கிறோம். எங்களால் வங்கி களில் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை’ என மாணவர்கள் கூறினர்.
ஆனால், கல்வி கடனையே தள்ளுபடி செய்கிறோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறோம். ஆட்சியில் அமர்ந்ததும் மது விலக்கு திட்டத்தில் தான் முதல் கையெழுத்திடுவேன் என்று கருணாநிதி உறுதி அளித்துள்ளார்’ என்றார் ஸ்டாலின்.
நாங்குநேரி
இதையடுத்து நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
`அதிமுக 234 தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெய லலிதா தோல்வி அடைவார் என்றும் உளவுத்துறை கூறுவதால் தோல்வி பயத்தில் பணமூட்டைகளை அதிமுகவினர் தயார் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளிலும் பணத்தை கொடுத்து வெற்றிபெற அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை.
இளம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடு படுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதை இதுவரை செய்யவில்லை. அதிமுக அரசுடன் தேர்தல் ஆணையம் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளதா என்று தெரியவில்லை. திமுக ஆட்சி அமைந்தால் வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு அணைக்கட்டுகள் தூர்வாரப்படும். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவை கள் அனைத்தும் பூர்த்தி செய் யப்படும்’ என்றார் ஸ்டாலின்.