தமிழகம்

7 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் தருமபுரி, பாளையங் கோட்டை, சேலம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் உட்பட 7 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சுட்டெரித்தது.

கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதனால் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பழவேற் காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரை சுற்றுலா தலங்களில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தர்ப்பூசணி, முலாம்பழம், இளநீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. வாகனங் களில் செல்லும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்காக கையுறை அணிந்து செல்வதைக் காண முடிகிறது.

தமிழகத்தில் நேற்று தருமபுரி உள்ளிட்ட 7 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்தது. தருமபுரியில் 104.18 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை 103.82, சேலம் 103.64, கரூர் பரமத்தி 103.1, மதுரை விமான நிலையம் 102.92, வேலூர் 102.92, திருச்சி 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று வெப்பம் சற்று குறைவாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் 98.6 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 95.18 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியிருந்தது.

“இன்று (ஏப்.18) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏப்.19, 20, 21 ஆகிய நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். சென் னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT