ஆர்டிஐ - பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஆர்டிஐ தகவல்களை பொதுத் தகவல் அலுவலர்கள் உரிய காலத்துக்குள் அளிக்க மாநில மனிதவள மேலாண்மை துறை உத்தரவு

க.சக்திவேல்

கோவை: தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் கேட்கப்படும் தகவல்களை பொதுத் தகவல் அலுவலர்கள் உரிய காலத்துக்குள் அளிக்கவேண்டும் என மாநில மனிதவள மேலாண்மை துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை சார்ந்த பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் மனு அனுப்பினால் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால், பல பொதுத் தகவல் அலுவலர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அனுப்பாமலும், மனுவில் என்ன தகவல் கேட்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளாமலும், திசை திருப்பும் தகவல்களை அளிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, மனுதாரர் முதல் மேல்முறையீடு செய்தாலும் மேல் முறையீட்டு அலுவலர்களும் பதில் அளிப்பதில்லை. இதனால் சென்னையிலுள்ள மாநில தகவல் ஆணையத்துக்கு மனு அளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுத்தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் உரிய காலத்தில் தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் நா.லோகு, மாநில மனித வள மேலாண்மை துறைக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து மாநில மனித வள மேலாண்மை துறை அரசுச் செயலர் மைதிலி ராஜேந்திரன் அனைத்துத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பொதுத் தகவல் அலுவலர்கள் மனுக்களை பெற்ற 30 நாட்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும். நகல்கள் வழங்குவதாக இருந்தால் அதற்கான கட்டணத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, மேல்முறையீட்டு அலுவலரும் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கோ அல்லது தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கோ மேற்கொண்டு புகார்கள் வராத வகையில் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களும், முதல் மேல்முறையீட்டு அலுவலர்களும் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT