தமிழகம்

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ‘அம்மன்’ வேடமிட்ட வீடியோவால் சர்ச்சை: மகளிர் தின சிறப்பு பகிர்வால் விவாதம்

வீ.தமிழன்பன்

காரைக்கால்: சர்வதேச மகளிர் தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அம்மன் வேடமிட்ட வீடியோ பதிவு இன்று (மார்ச் 8) சமூக ஊடங்களில் பரவி பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் தற்போதுதான் இடம்பெற்றுள்ளார். பெண்கள் முன்னேற்றம் சார்ந்து அவ்வப்போது ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசக்கூடிய “ஜான்சி” என்ற குறும்படம் உருவாகக் காரணமாக இருந்து, அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமது உறவினர் திருமண நிகழ்வில் அவர் நடனமாடும் காட்சி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்போது சர்வதேச மகளிர் தின வாழ்த்து தெரிவிக்கும் அமைச்சர் சந்திர பிரியங்கா அம்மன் வேடமிட்ட வீடியோ அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஊடங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

இதில், அவருக்கு ஆரத்தி எடுப்பது போலவும், தலையில் பூக்களை தூவுவது, கற்பூரம் காட்டுவது, அம்மன் வேடத்துக்கான ஒப்பணைகள் மேற்கொள்வது, நிறைவாக சக்தியின் உருவாக அம்மனாக தோன்றுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னணியில் பெண்ணின் உன்னதங்கள் குறித்த வசனங்கள் ஒலிக்கின்றன.

இந்த வீடியோ சமூக ஊடங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலரும் அதற்கு வரவேற்பும், அவரது தொடர் உழைப்புக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற செயல்பாடுகளை விட அமைச்சர் மக்களுக்கான தனது கடமைகளை சரிவர செய்தாலே போதும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இதே போல் ட்விட்டரில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உள்ளிட்டோரை டேக் செய்து "இந்தியில் வாசகங்களை" எழுதி இந்த வீடியோவை பதிவிட்டிருப்பதும் பேசு பொருளாகியிருக்கிறது.

SCROLL FOR NEXT