கிருஷ்ணகிரியில் 11 ஆண்டுகளாக வீட்டுமனை வழங்கக்கோரி அருந்ததியர் இன மக்கள் மனு அளித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அருந்ததியர் முற்போக்கு நலச்சங்க மாவட்ட தலைவர் வெங்கடசாமி, மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியது; அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி கடந்த 11 ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு நேரடியாகவும், மனுக்கள் பல கொடுத்தும், யாரும் பரிசீலிக்கவில்லை.
இதுதொடர்பாக இருமுறை போராட்டம் நடத்தியும் தீர்வில்லை. கிருஷ்ணகிரி ஆர்டிஓ.,விடமிருந்து, ஒரு கடிதமும், இடம் வழங்குவது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு விவரமளிக்குமாறு ஒரு கடிதமும் மட்டுமே வந்துள்ளது.
மேலும், ஆளுநருக்கு அனுப்பிய மனுக்கள், சென்னை ராஜ்பவன் அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட கடிதம் வந்தும், கடந்த 11 ஆண்டுகளாக எங்கள் அடிப்படை தேவைகளுக்காக போராடி வருகிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்யும், 200 குடும்பத்தினருக்கு தானம்பட்டி புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை வழங்க கோரினோம், போராட்டமும் நடத்தினோம்.
அதுகுறித்தும் தகவல் இல்லை. அந்த இடத்தில் வீட்டுமனை வழங்க முடியாவிட்டாலும் வேறு இடத்தில் எங்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.