சென்னிமலையில் உள்ள பூப்பறிக்கும் மலையை மீட்க வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள். 
தமிழகம்

சென்னிமலை அருகே உள்ள பூப்பறிக்கும் மலை - அரசு நிலம் என்பதற்கான ஆதாரங்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு

செய்திப்பிரிவு

சென்னிமலை அருகே உள்ள பூப்பறிக்கும் மலை, அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை, ஈரோடு ஆட்சியரிடம் வழங்கிய தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர், மலையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சா.முகிலன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னிமலை - உப்பிலி பாளையம் சாலையில் 6.85 ஏக்கர் பரப்பளவில் மலை அமைந்துள்ளது. சென்னிமலை பகுதி மக்கள், தங்கள் பண்பாட்டு நிகழ்வுகளான பூப்பறிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை இந்த மலையில் பல ஆண்டுகளாக கொண்டாடி வருவதால், இதற்கு பூப்பறிக்கும் மலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான இந்த மலை அமைந்துள்ள நிலத்தை, தனி நபர்கள் தங்களது பட்டா நிலம் என கையகப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரு மாதமாக மலையை வெட்டி, கற்கள் மற்றும் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு எவ்வித அரசு அனுமதியும் பெறவில்லை. இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்ததோடு, கட்டுமானங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவின் அடிப்படையில் விசாரணை நடந்தது. ஆனால், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், தனியாரிடம் பட்டா உள்ளதாகத் தெரிவித்ததோடு, புகார்தாரரான எங்களுக்குக் கூட தெரிவிக்காமல் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக்குப்பின்னர், பூப்பறிக்கும் மலையை அழிக்கும் பணி தீவிரமாய் நடந்து வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் பெற்ற ஆவணங்களின்படி, சென்னிமலை பூப்பறிக்கும் மலை அமைந்துள்ள 6.85 ஏக்கர் நிலம், அரசின் ஆர்.எஸ்.ஆர். ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம் என்பதற்கான ஆவணங்களை தற்போது தங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஏற்கெனவே, அரசின் நீர்நிலைப் பகுதிகளில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளால் சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள பத்திர பதிவுகள், பட்டா போன்றவை நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டு, அரசால் மீட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில், 6.85 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளமான பூப்பறிக்கும் மலை அமைந்துள்ள நிலத்தை, மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கைப்பற்றி, அதனை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT