மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஈசிஆர் வழியாக சென்னையை நோக்கிச் சென்ற முன்னாள் முதல்வர் பழனிசாமியை, மாமல்லபுரம் பேரூராட்சியில் புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக கவுன்சிலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம்புதிய கவுன்சிலர் தேர்தெடுக்கப்பட்டனர்.
இதில், அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதால் அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி யஷ்வந்த்ராவ் தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலர் ராகவன் துணைத் தலைவராகவும் பதவியேற்றனர். இதன்மூலம், தொடர்ந்துமூன்றாவது முறையாக மாமல்லபுரம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவினர் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்று, பின்னர் கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாக சென்னையை நோக்கி பயணித்தார். அப்போது, மாமல்லபுரம் நகரின்நுழைவு வாயில் பகுதியில் அதிமுகவின் புதிய கவுன்சிலர்கள் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் வெற்றிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும்என அவர்களை ஊக்கப்படுத்திவிட்டு, காரில் புறப்பட்டுச் சென்றார். இதேபோல், கோவளம் மற்றும் இடைக்கழிநாடு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்களை பழனிசாமி சந்தித்து பேசினார்.