நெய்வேலியில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நில எடுப்புத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
என்எல்சி நிறுவனம், சுரங்க விரிவாக்கத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெய்வேலி மந்தாரக்குப்பம் கெங்கை கொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழக்குப்பம் கிராமத்தைகையகப்படுத்தியது. அப்பகுதி யைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் தற்போது என்எல்சி ஆர்ச் கேட் அருகே "ஏ பிளாக்" மாற்றுக்குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 2012- ம் ஆண்டு என்எல்சி நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து முத்து மாரியம்மன் கோயில் கட்டினர். கோயில் கும்பாபிஷேகத்தின் போதுயாகசாலை நடத்தப்பட்ட இடத்தை, கோயிலுக்கே வழங்குவதாக என்எல்சி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடந்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக ஏற்கெனவே யாக சாலை நடந்த இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அந்த இடம் தனக்கு உரியது என ஒருவர் உரிமை கோரியுள்ளார். இதனால் அந்த இடத்தில் கோயில் திருப்பணிக்கான கட்டுமான பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் கோயில் திருப்பணி நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட அந்த இடத்தை கோயிலுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த மாதம் என்எல்சி நிறுவனத்தின் நில எடுப்புத் துறை பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு மீது என்எல்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து நேற்று என்எல்சி நிறுவனத்தின் நில எடுப்பு அலுவலகத்தை " ஏ பிளாக்" மாற்று குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில்,"எங்கள் ஊரில் வசிக்காத ஒருவருக்கு என்எல்சி நிறுவனம் எந்த அடிப்படையில் இடம் வழங்கியது எனத் தெரியவில்லை . அந்த நபரால் தங்கள் பகுதியில் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் "எனக் கூறி சென்றனர்.