புதுச்சேரி குயவர்பாளையம் அசோக் ராஜாவுக்கும் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சத்யாவிற்கும் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் உச்சத்தில் உள்ள சூழலில், இந்த மணமக்கள் திருமணம் முடிந்த கையோடு, ‘போர் வேண்டாம்’ என்பதை வலியுறுத்தும் வாசகங்களுடன் கூடிய பதாகைகளை மணமேடையில் ஏந்தி நின்றனர். உடன் நின்றிருந்த மணமக்களின் உறவினர்களும் போருக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அவர்கள் ஏந்தி நின்ற பதாகைகளில், ‘போரைத் தடுக்க வேண்டும் - அமைதியான சூழல் உருவாக வேண்டும்; போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், போர் மனித குலத்தை முடிவுக்குக் கொண்டு வரும்; போர் இல்லாத உலகத்தை படைப்போம்; நமது வாழ்க்கை மிகவும் குறுகியது, இருக்கும் போது சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன .
இதுபற்றி மணமக்கள் அசோக்ராஜா - சத்யா கூறுகையில், “உக்ரைனில் போர் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் நிலவ வேண்டும். எங்கள் திருமணம் போல் உக்ரைனிலும் சுப நிகழ்வுகள் நடைபெற வேண்டும் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும்.
அதுவே எங்கள் விருப்பம். இந்த நல்ல நாளில் அதை வெளிப்படுத்தும் விதமாக இப்படிச் செய்தோம்” என்று குறிப்பிட்டனர்.