மதுரை மேயர் தேர்வின் மூலம் திமுக நிர்வாகிகளிடையே பிளவு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு கட்சித் தலைமைதான் தீர்வுகாண வேண்டும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. திமுகவில் மாநகராட்சிக்குள் வடக்கு, தெற்கு என 2 மாவட்டச் செய லர்கள் உள்ளனர். வடக்கு மாவட் டத்துக்கு பொன்.முத்துராமலிங்கம். தெற்கு மாவட்டத்துக்கு கோ.தளபதியும் பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர். இவர்கள் கட்டுப்பாட்டில் 71 வார்டுகள் வருகின்றன.
புறநகர் வடக்கு மாவட்டத்தில் 14 வார்டுகள் உள்ளன. இதன் மாவட்ட செயலா ளராக அமைச்சர் பி.மூர்த்தி உள்ளார். புறநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் எம்.மணிமாறன் கட்டுப்பாட்டில் 15 வார்டுகள் உள்ளன. இத்துடன் தெற்கு மாவட்டத்தில் இணைந்துள்ள மத்திய தொகுதியில் வென்ற பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக உள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த மதுரை மாந கராட்சியும் 2 அமைச்சர்கள், 3 மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் யார் வழிநடத்துவது என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் இது மேலும் வலுக்கிறது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் பெறுவதில் மோதல், எம்எல்ஏ சரவணன் கட்சியிலிருந்து விலகியது என பல சம்பவங்கள் நடந்தன. தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோ.தளபதி, வடக்கில் சீட் பெற்று வெற்றிபெற்றார். இது பொன்.முத்துராமலிங்கத்துக்கு கடும் நெருக்கடியை அளித்தது. இதன் தொடர்ச் சியாக நடந்த மேயர் தேர்தல், திமுக நிர்வாகிகளிடையே மனக்கசப்பை மேலும் அதிகரித்துள்ளது.
5 முக்கிய நிர்வாகிகளும் பேசி ஒரு முடிவெடுத்து கூட்டணிக்கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு, திமுக வேட்பாளர், மேயர், துணைமேயர் தேர்வு என எதையும் செய்யவில்லை. அவரவர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் செல்வாக்கை காட்டுவதில்தான் அக்கறை காட்டினர். மாநகராட்சி மேயர் பதவியை தங்கள் ஆதரவாளருக்கு பெறுவதில் 5 பேருக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அது 3 அணிகளாக மாறியது. அமைச்சர்கள் இருவர், பொன். முத்துராமலிங்கம் ஆகிய 3 பேரும் தலா ஒருவரை மேயர் வேட் பாளராக பரிந்துரை செய்தனர்.
எனினும் 4 பேர் பொன். முத்துராமலிங் கத்துக்கு எதிராகச் செயல்பட்டனர். இதில் பழனிவேல் தியாகராஜன் பரிந்துரைந்த இந்திராணி மேயரானார்.
அவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டவுடன் திமுக நிர்வாகிகளிடையே பிளவு மேலும் அதிகரித்தது. இவரை சிபாரிசு செய்த கோ.தளபதி கூட மேயர் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. திமுக கவுன்சிலர்கள் பலரும் விழாவை புறக்க ணித்தனர். பொன். முத்துராமலிங்கம் கடும் வருத்தத்தில் உள்ளார்.
மேயர் பதவி கைநழுவினாலும், துணைமேயர் பதவியிலாவது தங்கள் ஆதரவாளர் ஒருவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்த்த நிலையில், அப்பதவியும் மார்க்சிஸ்ட் வசம் போய் விட்டதால் திமுக நிர்வாகிகள் சோர்வடைந்து விட்டனர். தற்போதைய நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு பக்கமும், மற்ற 4 பேரும் தனித்தனியாகவும் உள் ளனர். இதே நிலை நீடித்தால், மதுரை மாநகர் திமுகவில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். மாநகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் திமுகவினராலேயே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டு விமர்சனத்துக்கு வழிவகுக்கலாம்.
அது அரசு நிர்வாகத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம். திட்டப் பணிகளை பெறுவது, ஒப்பந்தங்களில் பங்கேற்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கடும் போட்டி உருவாகும். எல்லா விஷயத்திலும் நீயா, நானா என போட்டி ஏற்பட்டு 4 பேருக்கும் வாய்ப்பே கிடைக்காத சூழலை உருவாக்கி விடும்.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். இதைத்தவிர்க்க ஒரே வழி மதுரை மாநகராட்சி பகுதியில் கட்சியின் நிர்வாகத்தை ஒரே நிர்வாகியின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். தகுதியான நபரை உடனே தேர்வு செய்து, இப்பொறுப்பில் நியமிக்க முதல்வர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.