விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து 72 ஏக்கரில் ரூ.5.20 கோடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் அமைக் கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, பி.வி. நிர்மலா வெங்கட்ராமராஜா, பி.வி. அபினவ் ராமசுப்பிரமணியராஜா, தலைமை செயல் அலுவலர் ஏ.வி.தர்மகிருஷ்ணன்ஆகியோர் உடனிருந்தனர். 
தமிழகம்

72 ஏக்கரில் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்க சூழலியல் பூங்கா: அருப்புக்கோட்டை அருகே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

விருதுநகர்: நாட்டிலேயே முதன்முறையாக சுமார் 72 ஏக்கர் பரப்பளவில் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிமெண்ட் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களில் ஒன்றான சுண்ணாம்புக்கல்லை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் ராம்கோ நிறுவனம் எடுத்து வருகிறது. தற்போது 60 மீட்டர் ஆழம் வரை சென்றுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு அச்சுரங்கத்தை அப்படியே கைவிடாமல் ராம்கோ நிறுவனம் புதிய முயற்சியாக ரூ.5.20 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்துள்ளது.

இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைப் பாதை, வறண்ட நிலத் தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, கல் பூங்கா என பிரிக்கப்பட்டு பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் சுரங்கத்தில் உள்ள தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல் பூங்கா, நடைபாதை, 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் (மியாவாக்கி) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விலங்குகளின் பல்லுயிர் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீர்நிலைப் பாதை, வறண்ட நிலத்தில் வளரும் தாவரங்கள், 200 வகையான மரங்கள், மூலிகைத் தாவரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், நுண்ணுயிரிகள் வசிக்கத் தொடங்கியுள்ளதால் இப்பூங்கா குறுங்காடு போல் காட்சியளிக்கிறது. 2023-ம் ஆண்டு முடிவில் 5 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் 400 ஏக்கர் பரப்பளவில் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பூங்கா திறப்பு விழா பந்தல்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டாலின் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசு நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன், எம்எல்ஏக்கள் அசோகன், ரகுராமன், ராம்கோ குழுமத் தலைவர் வெங்கட்ராம ராஜா, அவரது மனைவி நிர்மலா மற்றும் ராம்கோ நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT