ஏனுசோனை, உல்லட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்தனர்.
சூளகிரி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட ஏனுசோனை, உல்லட்டி ஊராட்சி பொதுமக்களிடம் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி குறைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆலங்கிரி, ஏனுசோனை,உனிசெட்டி, கொத்தபள்ளி, உல்லட்டி, எட்டிபள்ளி, சீபம், தூக்கண்டபள்ளி, முகண்டபள்ளி, மணியங்கள், கோயில் எப்பளம், டேம் எப்பளம் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை எம்எல்ஏ-விடம் வழங்கினர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் கூறும்போது, “எங்கள் பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். அங்கான்வாடி மையம் அமைத்து தர வேண்டும். மயானத்துக்கு செல்ல பாதை ஏற்படுத்தி தர வேண்டும். மின்மாற்றிகளை சீரமைத்து தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து, சாலை, சீராக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும்” என்றனர்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என எம்எல்ஏ பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, துணைச் செயலாளர் ராஜா, நிர்வாகிகள் மாதேஷ், சீனிவாசன், ஊராட்சித் தலைவர்கள் கலைச்செல்வி ராமன், கிருஷ்ணமூர்த்தி, தொழில்நுட்ப அணி பிரிவு மாவட்ட செயலாளர் வேலன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.