மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்துவது தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை பெறவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சட்ட விரோதமானது என்று கடந்த 2013 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் நிலை உருவாகியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பாகும்.
கல்வி, மருத்துவம் ஆகியவை பொதுப் பட்டியலில் இருப்பதைக் காரணம் காட்டி, இவை தொடர்பான மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அதிகரித்து வருகிறது.
அத்தகையதொரு நடவடிக்கையாகத்தான் மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு செல்லாது என்றும், இதுதொடர்பான மத்திய அரசின் முடிவு சட்ட விரோதமானது என்றும் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது தான் நீதிபதி அனில் தவே தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் விளக்கவில்லை என்ற போதிலும், நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களது விருப்பப்படி பெயரளவுக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அதிக நன்கொடை தரும் மாணவர்களைச் சேர்ப்பதைத் தடுப்பதுதான் இந்தத் தீர்ப்புக்கான காரணம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நோக்கமும், நிலைப்பாடும் குறைகூற முடியாதவை. ஆனால், சில யானைகளைக் கொல்வதற்காக நடத்தப்படும் வேட்டையில் ஆயிரக்கணக்கான எறும்புகள் உயிரிழப்பதைப்போல, மாணவர் சேர்க்கை முறைகேடுகளில் ஈடுபடும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உணராமல் போனது துரதிருஷ்டவச மானதாகும்.
மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும்போது, அதற்காக தனிப் பயிற்சி வகுப்புகளில் சேரவேண்டியது அவசியமாகிறது. இத்தகையப் பயிற்சி வகுப்புகள் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே உள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களால் இத்தகையப் பயிற்சியைப் பெறுவது பூகோள அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் சாத்தியமற்றது.
இதனால், நகர்ப்புறங்களில் உள்ள பணக்கார மாணவர்கள் மட்டும்தான் மருத்துவப் படிப்புகளில் சேரமுடியும் என்ற நிலை ஏற்படும். மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டும் மத்திய அரசும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இப்படிப்பட்ட நடவடிக்கையால் கிராமப்புற ஏழை மாணவர்களில் மருத்துவப் படிப்புக் கனவு சிதைக்கப்பட்டுவிடும் என்பதை உணர மறுப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் 1984ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு வரை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்தக் காலகட்டத்தில், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களால் 10 முதல் 15 விழுக்காடு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
ஆனால், பாமக சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் பயனாக, 2006 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டப் பிறகு மருத்துவப் படிப்புகளில் சேரும் கிராமப்புற, ஏழை மாணவர்களின் அளவு 65 முதல் 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நுழைவுத் தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிடும்.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. மாநிலங்கள் அவற்றின் சொந்த செலவில், அம்மாநில மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளை அமைத்து நடத்தும்போது, அவற்றுக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்துவது, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடும் செயலாகும்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கியவர்கள், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதுதான் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மாநில நலனுக்கு எதிரானது என்ற போதிலும், இதை அவர்கள் தடுக்கவில்லை என்பதிலிருந்தே மாநில நலன் மீதான அவர்களின் அக்கறையை புரிந்துகொள்ளலாம்.
தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும் இந்த முடிவுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை பெறவேண்டும்.
பாமக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்புப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.