தமிழகம்

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணி: மாதவரம் உட்பட 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு நாளை முதல் 11-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை (மார்ச் 8) காலை 8 மணி முதல் 11-ம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் வட சென்னை பகுதிகளான மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதற்கு மாற்று ஏற்பாடாக புழலில் அமைந்துள்ள 300 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் 11-ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் வழங்கப்படும். இதனால், குடிநீர் பெறுவதில் சிரமம் இருந்தாலோ அல்லது அவசரத் தேவைகளுக்கோ பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பகுதி 1 பொறியாளர் 8144930901, மணலி பகுதி பொறியாளர் 8144930902, மாதவரம் பகுதி பொறியாளர் 8144930903, வியாசர்பாடி, பட்டேல் நகர் பகுதி பொறியாளர் 8144930904 எண்களையும், தலைமை அலுவலகத்தை 044-45674567, 28451300 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT