தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி, தென்காசி, கரூர் மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் அவர் மிகவும் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. அவரது வேண்டுகோளை ஏற்று கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர் ராஜினாமா செய்து விட்டார்கள். மீதமுள்ளவர்கள் நாளைக்கு ராஜினாமா செய்துவிடுவார்கள் என நம்புகிறோம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரையும் கைது செய்ய வேண்டும். ஆணவ படுகொலை மீண்டும் நடைபெறாமல் இருக்க தனிச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள், கர்நாடகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவிப்பது நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சீரழிக்கும்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதப்படுத்தி வருவது மட்டுமில்லாமல் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது வருத்தத்துக்குரியது. உக்ரைனில் உள்ள மாணவர்களை போர்க்கால அடிப்படையில் பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய சங்கங்களின் ஆலோசனையை கேட்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயம் சம்பந்தமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளோம், என்றார் அவர்.