சென்னை: விழுப்புரம் அருகே ஐந்தரை லட்சம் பணம் கட்டிய நிலையிலும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார், இச்சம்பவத்திற்கு காரணமான தனியார் நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சின்னதுரை என்கிற விவசாயி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கி உள்ளார். எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி 5 1/2 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். இந்த நிலையில் தவணை கட்டவில்லை என்ற காரணம் கூறி டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். விவசாயி ஒரு குறிப்பிட்ட காலத்தில் கட்டி விடுவதாக சொல்லியும் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவனத்தினர் குண்டர்களை வைத்து டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதுரை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கட்டாயப்படுத்தி விவசாயிகளை மிரட்டும் நிதி நிறுவனத்தின் மீதும், அதன் மேலாளர் டிராக்டரை பறிமுதல் செய்த குண்டர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் வேறு எங்கும் இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதியுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.