தமிழகம்

புதுச்சேரிக்கு வெள்ள நிவாரணம் ரூ.17 கோடிதானா?: முழு விளக்கத்தை தவிர்த்து புறப்பட்ட ஆளுநர் தமிழிசை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வெள்ளநிவாரணம் ரூ. 300 கோடி கேட்டு ரூ. 17 கோடி மட்டுமே புதுச்சேரிக்கு தரப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு முழுமையாக பதில் தருவதை துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவிக்காமல் புறப்பட்டார்.

புதுச்சேரி பழைய துறைமுக பாலத்தின் இடிந்த பகுதியை இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சென்று பார்வையிட்டார். அதிகாரிகள் உடனிருந்து விளக்கினர். இந்த ஆய்வின்போது உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, அதிமுக செயலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதன் பின்னர், ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுக பாலம் இடிந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்தப் பாலம் புதுச்சேரியின் அடையாளம். இதனை அகற்றிவிட கூடாது. பழமை மாறாமல் சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள். இதுதான் என்னுடைய விருப்பமும் கூட. இதுதொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து இந்த பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ் இப்பகுதியை மேம்படுத்த ரூ.60 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் வேலை நடைபெறும்போது பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பேன். அந்த காலத்தில் இங்கு பல சரக்கு கப்பல்கள் வந்து சென்றுள்ளது. இது மிகப்பெரிய வாணிப தலமாக இருந்துள்ளது. அந்த பழமையை மீட்டெடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், கப்பல்கள் விடவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மேம்படுத்த வேண்டும். தற்போது கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸும் மோசமான நிலையில் உள்ளதே என்று கேட்டதற்கு, "ராஜ்நிவாசிஸ் கட்டிடமும் சிறிது பலம் இல்லாமல் உள்ளது. அதனை இடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளேன்." என்றார்.

வெள்ளநிவாரணமாக புதுச்சேரி கோரிய தொகையில் மிககுறைவாகவே மத்திய அரசு தந்துள்ளார்களே என்று கேட்டதற்கு" மத்திய அரசு வெள்ள நிவாரணமாக புதுவைக்கு ரூ.17 கோடி கொடுத்துள்ளது. பணம் மட்டுமல்லாமல் பொருளாக மத்திய அரசு நிறைய உதவி செய்துள்ளது. மீட்புப் பணிக்கு துணை ராணுவத்தை அனுப்பியது. புதுவைக்கு அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி அரசின் கோரிக்கை வெள்ள நிவாரணத்தொகையான ரூ.300 கோடியைப் புறக்கணித்து விட்டு மத்திய அரசு வெறும் ரூ. 17 கோடி மட்டுமே தந்துள்ளதே என்று கேட்டதற்கு அதற்கு பதில் தராமல் ஆளுநர் புறப்பட்டார்.

SCROLL FOR NEXT