மண்வளத்தை காக்க வலியுறுத்தி லண்டனில் இருந்து 30,000 கி.மீ. தூரம் இருசக்கர வாகனப் பயணம் மேற்கொள்ள உள்ள சத்குருவை, கோவை ஈஷா வளாகத்தில் ஆதியோகி சிலை முன்பு வழியனுப்பிய தன்னார்வலர்கள். 
தமிழகம்

மண்வளத்தை காக்க லண்டனில் இருந்து இருசக்கர வாகனத்தில் 30,000 கி.மீ. தூரம் சத்குரு பயணம்

செய்திப்பிரிவு

மண்வளத்தை காக்க வலியுறுத்தி லண்டனில் இருந்து 30,000 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பயணிக்க உள்ளார்.

உலகளவில் மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு சத்குரு தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணிக்க உள்ளார். இதைஒட்டி, ஏராளமான ஈஷா தன்னார்வலர்கள் நேற்று கோவை ஈஷா வளாகத்திலுள்ள ஆதியோகி சிலை முன்பு திரண்டு சத்குருவை வழியனுப்பினர். வரும் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணத்தை தொடங்கும் அவர், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வந்து தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இதற்கிடையே, ஐவெரிகோஸ்ட் நாட்டில் ஐ.நா.வின் ‘பாலைவனமாவதை தடுக்கும் அமைப்பு' நடத்தும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டிலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் சத்குரு பங்கேற்கவுள்ளார்.

கோவையில் இருந்து நேற்று அமெரிக்கா புறப்பட்ட சத்குரு, பின்னர் கரீபியன் தீவுகளுக்கு பயணிக்கிறார்.

இதுதொடர்பாக கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் சத்குரு கூறும்போது, ‘‘உலகளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். 2045-ம் ஆண்டுஉலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும். ஆனால், உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40% குறைந்துவிடும். இதனால், 192 நாடுகளில் மண் வளப் பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்க வலியுறுத்த உள்ளோம்.

இம்முயற்சியில் ஐ.நா.வின் அங்கமாக இருக்கும் UNCCD, UNEP, WFP ஆகிய 3 அமைப்புகள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT