திருப்போரூர் அருகே ஆலந்தூரில் நடைபெற்ற விழாவில் டாம்ப்கால் நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்தவரின் வாரிசுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். 
தமிழகம்

அருகி வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் அருகி வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்க மாநில மூலிகை தாவர வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கதர், கிராம தொழில்கள் வாரியம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகளில் சித்த மருத்துவ மருந்துகள் விற்கப்படும் என்று கடந்த நிதி நிலை அறிக்கையின்போது அறிவித்தார். அந்த திட்டத்தின் தொடக்க விழா திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் டாம்ப்கால் நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க வந்தமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகம் (டாம்ப்கால்) மூலம் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவத்துக்கு தேவையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலை 1983-ம் ஆண்டு 5.90ஏக்கர் பரப்பில் இங்கு தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அரசு நிறுவனங்கள் மற்றும் டாம்ப்காலின் விற்பனையகங்களில் விற்கப்படுகின்றன. இந்த மருந்துகள், தமிழ்நாடு கதர், கிராமத் தொழில்கள் வாரியம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் நடத்தப்படும் கடைகளில் விற்கப்படும் என்று தமிழக முதல்வர்அறிவித்தார். அந்தத் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அருகி வரும் மருத்துவ தாவரங்களைப் பாதுகாக்கமாநில மூலிகை தாவர வாரியம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்று உயிரிழந்தவரின் வாரிசுக்கு பணி ஆணை, சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் சு.கணேஷ், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT