தமிழகம்

திமுகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்காத ஜெயலலிதா

செய்திப்பிரிவு

சென்னையில் நடந்த அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா, மற்ற கட்சிகளைப் பற்றி பேசாதது அக்கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெய லலிதா, நேற்று முன்தினம் மாலை சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார். தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

மதுவிலக்கு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அவர், தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கியது திமுகதான், திமுகதான் தமிழக மக்களை அதிகம் குடிக்க வைத்தது என கடுமையாக விமர்சித்தார். ஆனால் பாஜ, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகள் உள்ளிட்ட எந்த கட்சியையும் அவர் விமர்சிக்கவில்லை. இது அதிமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரத்தின்போது, கிராமப்புறங்களில் அந்தந்த பகுதியில் செய்து முடிக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே எடுத்துக் கூற வேண்டும். நகர்ப்புறங்களில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டும் என ஏற்கெனவே தொண்டர்களுக்கு அதிமுக தலைமையில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை திமுகதான் எதிரி. மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றும் இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT