உக்ரைனில் இருந்து நாடு திரும்ப இந்திய தூதரகம் அளித்த அவசரகால அழைப்பு 10 தொலைபேசி எண்களில் ஒன்று கூட செயல்படவில்லை. இந்திய தூதரகத்தினர் வட இந்தியர்களுக்கு மட்டும் முன் உரிமை கொடுப்பதாக உக்ரைனில் இருந்து கொடைக்கானல் திரும்பிய மருத்துவ மாணவி அனுஷியா ஆதங்கம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த 2 மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் மூண்டதையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் தவித்தனர். இவர்களை பாதுகாப்பாக மீட்டுவர மாணவிகளின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், கொடைக்கானலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரது மகள் அனுஷியா மட்டும் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு உக்ரைனில் இருந்து கொடைக்கானல் வந்து சேர்ந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைனில் கீவ் பகுதியில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வந்தேன். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. நாங்கள் பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்தோம். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தவித்தோம்.
நாடு திரும்ப இந்திய தூதரகம் அளித்த அவசர கால அழைப்பு 10 எண்களில் ஒன்று கூட செயல்படவில்லை. இந்திய தூதரகத்தினர் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன் உரிமை கொடுக்கின்றனர். இந்தி மொழியில் அறிவிப்பதால் தமிழக மாணவர்களுக்கு மொழி தெரியாமல் சிரமம் ஏற்பட்டது. இறுதியாக தகவல்களை மற்றவர்களிடம் கேட்டு பெற்று வந்தோம். ஏராளமான தமிழக மாணவ, மாணவியர் இன்னும் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை மத்திய, மாநில அரசுகள் விரைவில் மீட்க வேண்டும் என்றார்.