புதுடெல்லி: உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை திமுக எம்.பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் குழு சந்தித்தது. இந்தக் குழுவுக்கு மாநிலங்களவை திமுக அவைக்குழுத் தலைவரான திருச்சி சிவா எம்.பி தலைமை தாங்கினார். மேலும், திமுக எம்.பிக்கள் எம்.முகம்மது அப்துல்லா, கலாநிதி வீராச்சாமி ஆகியோரும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்கு பின் பேசிய திருச்சி சிவா, "உக்ரைன் பேர் துவங்கியது முதலாகவே அங்கு சிக்கிய நம் மாணவர்களை மீட்பதில் தமிழக முதல்வர் அதிதீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, டெல்லியிலும், சென்னையிலும் உதவி மையங்கள் அமைத்து துரிதமாக பணிகள் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த உதவி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான மெயில்களும், தொலைபேசி அழைப்புகள் உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து வந்தபடி உள்ளன. மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதால்தான் நாடாளுமன்ற எம்.பி.க்களான எங்கள் மூவரையும் குழுவாக நியமித்து முதல்வர் இங்கு அனுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இன்று வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்தோம்.
இந்தச் சந்திப்பில், சுமார் ஒரு மணி நேரம் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு அமைச்சர் விளக்கினார். உக்ரைனில் தமிழக மாணவர்கள் சிக்கியுள்ள இடங்கள், எல்லைகளில் நாடு திரும்பக் காத்திருக்கும் மாணவர்கள் விவரங்கள் என எங்களிடம் இருந்த அனைத்து விவரங்களையும் அமைச்சரிடம் அளித்துள்ளோம். இன்றுவரை 717 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 2,223 மாணவர்கள் இன்னும் அங்கு காத்திருக்கின்றனர். கீவ் போன்ற போர் நிகழும் நகரங்களில் ஆபத்தான சூழலில் தமிழக மாணவர்கள் பலரும் சிக்கியுள்ளனர். சுமி என்ற பகுதியில் அதிகமான மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவர்களை மீட்க இரண்டு நாடுகளிடமும் மத்திய அரசு பேசி வருகிறது.
சில இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெறும் இடங்களுக்கு சில கி.மீ தொலைவில் மாணவர்களை அழைத்து வரப்படும் ஆபத்து உள்ளது. இவர்களுக்கான உணவுகள் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளிலும் போர் நிறுத்தம் செய்து மாணவர்களை வெளியேற்ற முயற்சிக்கப்படுகிறது. முதல்வர் யோசனையின் பேரில் எங்கள் குழு அந்த எல்லை நாடுகளுக்கு சென்று தங்கி மீட்பு பணிக்கு உதவுவதன் விருப்பத்தை தெரிவித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "உக்ரனிலிருந்து எல்லைகளுக்கு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள், அதற்கானக் கட்டணத்தை அளிக்க முடியாமல் தவிப்பதாக புகார் எழுந்ததை அமைச்சரிடம் தெரியப்படுத்தினோம். இதற்கு கல்வி நிறுவன ஏஜெண்டுகள் மூலமாக தொகை அளித்து, உதவி வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து டெல்லி வரை வரும் செலவை மத்திய அரசும், டெல்லியில் இருந்து மாணவர்கள் வீடுகள் வரை செல்லும் செலவை தமிழக அரசும் ஏற்று செய்து வருகிறது. நாளை மேலும் அதிக விமானங்களை அனுப்பி அடுத்த இரண்டு தினங்களில் அனைத்து மாணவர்களையும் மீட்க முயல்வதாகவும் அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.
உக்ரைனின் மீட்பு பணியில் இந்திய அதிகாரிகள் இந்தியில் மட்டும் பேசுவதால் மொழிப் பிரச்சனை எழுவதாகவும் தமிழக மாணவர்கள் புகார் செய்திருந்தனர். இப்பிரச்சனையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் எங்கள் குழு முன்வைத்தது. இதற்கு அந்த அதிகாரிகளிடம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் என இரண்டு மொழிகளிலும் பேசும்படி அறிவுறுத்துவதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து இதற்கான உத்தரவையும் அவர் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ளார். இன்று டெல்லியில் நாங்கள் தங்கி வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிந்து உக்ரைனுக்கு நேரில் செல்வது குறித்து முடிவு செய்ய உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் சந்திப்பிற்கு பின் தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வந்த திருச்சி சிவா தலைமையிலான தமிழக அரசின் குழு, அங்கு தங்கியிருந்த உக்ரைனில் மீட்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசியது. பிறகு டெல்லி விமான நிலையத்திற்கும் நேரில் சென்ற அவர்கள், அங்கிருந்த தமிழக மாணவர்களிடமும் பேசினர்.