சென்னை: ’’கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை, ஆணவப் படுகொலை எனும் காட்டு மிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "தற்கொலை என மூடிமறைக்க முயற்சித்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை ஆணவப் படுகொலை எனும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையவேண்டும். தமிழகத்தைப் பீடித்துள்ள சாதி வெறி ஒழியட்டும்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். 2015-ல் கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர். இவ்வழக்கை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கை தீர்ப்புக்காக மதுரை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வக்குமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு (எ)ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கைதான செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 5 பேர் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.