துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத தயார் நிலையில் இருந்த தேர்வர்கள்.படம்: க.பரத் 
தமிழகம்

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு தொடங்கியது: மே மாதம் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலி இடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

மெயின் தேர்வு பொது அறிவு தொடர்பான 3 தாள்களை உள்ளடக்கிய தேர்வாகும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மெயின் தேர்வு சென்னையில் நேற்று தொடங்கியது. காலை9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுஅறிவு முதல் தாள் தேர்வு நடந்தது. 37 மையங்களில் 3,800 பேர் தேர்வு எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி, சி.முனியநாதன், கே.ஜோதிசிவஞானம், கே.அருள்மதி, அருட்தந்தை எம்.ஆரோக்கியராஜ் ஆகியோர் பல்வேறு மையங்களில் ஆய்வு செய்தனர். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு தேர்வு மையங்களை ஆய்வுசெய்தார். மெயின் தேர்வு முடிவுகள் மே மாதம் மத்தியில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். பொது அறிவு 2-வது தாள் இன்றும் (சனி), 3-வது தாள் நாளையும் (ஞாயிறு) நடக்க உள்ளன.

SCROLL FOR NEXT