திமுக தலைமை அறிவிப்புக்கு மாறாக நெல்லிக்குப்பத்தில் நடந்த தலைவர் தேர்தலைக் கண்டித்து பண்ருட்டி - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர். 
தமிழகம்

விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பத்தை திமுகவினர் கைப்பற்றினர்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், துணைத் தலைவர் பதவி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சியைப் பொறுத்தவரை திமுக 13, காங்கிரஸ் 1, அதிமுக 3, விடுதலைச்சிறுத்தைகள் 2, சுயேச்சைகள் 7 பேர் வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் நெல்லிக்குப்பம் நகராட்சி திமுக வசமாகும் நிலை இருந்தது.

இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி திமுக தலைமை நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கவுன்சிலர் கிரிஜா திருமாறன் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இதனிடையே 13 திமுக கவுன்சிலர்களுடன் மொத்தம் 20 கவுன்சிலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று தலைவர் தேர்தலின்போது அழைத்து வரப்பட்டனர். கிரிஜாவைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் ஜெயந்தியும் மனுத்தாக்கல் செய்தார். வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர் ஜெயந்தி 20 வாக்குகள் பெற்று தலைவரானார். கிரிஜா 3 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.இதையடுத்து நெல்லிக்குப்பம் நகராட்சி முன்பு திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆவேசமாக முழக்கமிட்டு, மறியலிலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் திமுக கவுன்சிலர் ஜெயபிரபா நகர்மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT