டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை 20-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பு உட்பட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 300 பேர் ஒன்றுகூடி டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிட செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச்சொல்லி போலீஸார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் காந்தி இர்வின் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட, போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் ஒன்றாக கைகளை கோர்த்துக்கொண்டு நின்றுகொண்டனர். இதனால் போலீஸார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்ற கடும் சிரமப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை் போலீஸார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வாகனங்களில் ஏற்றினர். சிலரை கை, கால்களை பிடித்து தூக்கி சென்று வாகனங்களில் ஏற்றினர்.
சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாடகர் கோவன் கைது
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளரும், மாநில தலைமைக் குழு உறுப்பினருமான காளியப்பன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னத்துரை, மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா, மகஇக பாடகர் கோவன், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் உட்பட சுமார் 300-க்கும் அதிகமானோர் திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் சேமிப்புக் கிடங்குக்கு எதிரே உள்ள சாலையில் நேற்று திரண்டனர்.
டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சாலையைக் கடக்க முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் கோவன், குழந்தைகள் 32 பேர், பெண்கள் 62 பேர் உட்பட மொத்தம் 276 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை, விழுப்புரம், திருச்சி, மதுரை, தருமபுரி ஆகிய இடங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோஷங்கள் முழங்க.. அவர்கள் எதிரில் அரண்போல் அணிவகுத்து நிற்கும் போலீஸார்.
வேனில் ஏற்றுவதற்காக ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்கும் பெண் போலீஸ்.