அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து 3 முறை புகாரில் சிக்கும் ஆட்டோக்களின் பர்மிட் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கிலோ மீட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கத்தில் 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுக்களின் சோதனையில் சுமார், 3 ஆயிரம் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், படிப்படியாக இந்த ஆட்டோக்கள் விடுவிக்கப்பட்டன.
இதற்கிடையே, இந்த சோதனை குழுக்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், ஆட்டோ கட்டண வசூல் மீண்டும் பழைய நிலைக்கே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடந்ததால், ஆட்டோக்கள் மீதான சோதனை குறைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் களமிறங்கியுள்ளன.
கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார், வாகன ஆய்வாளர்கள் தர், விஜயகுமார், செழியன், அருணாசலம், ஜெயலட்சுமி ஆகியோர் புகாரின் அடிப்படையில் தி.நகரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். அப்போது, அதிக கட்டணம் வசூலித்த 10 ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஆட்டோக்களின் பர்மிட் மற்றும் ஓட்டுநரின் உரிமம் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் பணியில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால், சில வாரங்களாக ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது, ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல், மீட்டர் பொருத்தாதது உள்ளிட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க மீண்டும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த 2 நாட்களில் மொத்தம் 35 ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆட்டோ பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து 3 முறை புகாரில் சிக்கினால் அந்த ஆட்டோவின் பர்மிட் நிரந்தர மாக ரத்து செய்யப்படும். அந்த வகையில் இதுவரை 3 ஆட்டோக்களின் பர்மிட் நிரந்தரமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.