கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மங்கலம் பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பேரூராட்சியின் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும், துணைத் தலைவர் பதவி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது. இப்பேரூராட்சியில் திமுக கூட்டணி 8 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றியிருந்த நிலையில், மேலும் இரு சுயேச்சைகள் திமுகவுக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து மங்கலம்பேட்டை பேரூராட்சி திமுக வசமாகும் நிலை இருந்தது.
இந்த நிலையில் மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி திமுகதலைமை நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நிலையில், வேல்முருகன் என்றகாங்கிரஸ் கவுன்சிலர் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இதனிடையே 4 திமுக கவுன்சிலர் களுடன் 2 சுயேச்சைகள், ஒரு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஒரு தேமுதிக உறுப்பினர் என 8 கவுன்சிலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தலைவர் தேர்வின் போது, காங்கிரஸ் கவுன்சி லர் வேல்முருகன் மனுத்தாக்கல் செய்தபோது, திமுக கவுன்சிலர் சாம்சத் பேகமும் மனுத்தாக்கல் செய்தார். வாக்குப் பதிவு முடிந்து, திமுக கவுன்சிலர் சாம்சத்பேகம் 8 வாக்குகள் பெற்று தலைவரானார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.
அங்கு வந்த விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ எம்.ஆர்.ராதாகிருஷ் ணன் தலைமையிலான அக்கட்சியி னர், கூட்டணித் தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகக் கூறி, விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானம் செய்தும்கூட காங்கிரஸார் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.