முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், கண்டனூர் பேரூராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரை, திமுக வேட்பாளர் தோற்கடித்தார்.
கண்டனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. திமுக- 7, காங்கிரஸ், அதிமுக, அமமுக, சுயேச்சைகள் தலா 2 இடங்களை வென்றன. திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு 6-வது வார்டு திமுக கவுன்சிலர் சங்கீதாவும், துணைத் தலைவர் பதவிக்கு 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நடராஜனும் அறிவிக்கப்பட்டனர்.
கண்டனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்த தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சங்கீதா போட்டியின்றி தேர்வானார். ஆனால், பிற்பகலில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கவுன்சிலர் நடராஜனை எதிர்த்து 1-வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா போட்டியிட்டார்.
இதில் மீனா 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடராஜன் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொந்த ஊரில் துணைத் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரை, திமுக வேட்பாளர் வென்றது காங்கிரஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.