தமிழகம்

புதுச்சேரி: தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.32 லட்சம் உற்பத்திக்கு பிந்தைய மானியம் அறிவிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு ரூ.1,500, ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கும் திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் வருடாந்திர செயல் திட்டத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவுதல், மலர், காய்கறி, பழபயிர், வாசனை பயிர்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 154.87 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த 449 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்து 47, 544.82 சென்டில் வெற்றிலை சாகுபடி செய்த 37 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 230 என மொத்தம் ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்து 277 நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.4) நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் வெற்றிலையில் பச்சைக்கொடி, வெள்ளைக்கொடி ரகங்கள் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றின் சாகுபடிக்கான தொழில் நுட்பங்கள் மற்றும் இயற்கை சார்ந்த இடுபொருட்களை விவசாயிகள் பயன்படுத்தும் பொருட்டும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT