தமிழகம்

கும்பகோணம் மாநகராட்சி: சொந்த ஆட்டோவில் வந்து மேயர் பதவியேற்ற காங்கிரஸ் வேட்பாளர்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் க.சரவணன் தனது சொந்த ஆட்டோவில் வந்து மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கீடு செய்தது திமுக தலைமை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் (42), மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று காலை சரவணன் தனது சொந்த ஆட்டோவில், ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்தவாறு கும்பகோணம் காவேரி நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சூழ ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியில் இருந்த காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்கள் மூவரும் என 45 பேர் கலந்து கொண்டனர். அதிமுகவின் மூன்று உறுப்பினர்களும் மேயர் தேர்தலுக்கான கூட்டத்துக்கு வரவில்லை.

இதையடுத்து, ஆணையர் செந்தில்முருகனிடம் மேயர் வேட்பாளரான சரவணன் தனது வேட்புமனுவை வழங்கினார். வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிடாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். பின்னர், மேயருக்கான இருக்கையில் அமரவைத்து, அவருக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மேயர் சரவணன் தலைமையில் முதல் மாமன்றக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த மேயர் சரவணனை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் ஏராளமான திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

SCROLL FOR NEXT