திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக 27-வது வார்டில் வென்ற மு.அன்பழகன் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று காலை 9.50 மணியளவில் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமானிடம் தனது வேட்பு மனுவை மு.அன்பழகன் தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உறுப்பினர்கள் தலா 5 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். போட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக காலை 10 மணியளவில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அறிவித்தார்.
இதையடுத்து, மன்ற உறுப்பினர் இருக்கையில் இருந்து எழுந்த மு.அன்பழகன் அனைவரையும் நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்து, கூட்ட அரங்கில் இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தினார்.தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் மு.அன்பழகனுக்கு துண்டு அணிவித்து வாழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் முன்னிலையில் மு.அன்பழகன் மேயருக்கான அங்கியை அணிந்து பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் அதிமுக உறுப்பினர்கள் சி.அரவிந்தன் (14-வது வார்டு), அனுசுயா ரவிசங்கர் (37-வது வார்டு), கோ.க.அம்பிகாபதி (65-வது வார்டு) மற்றும் சுயேச்சை வேட்பாளர் எல்ஐசி க.சங்கர் (20-வது வார்டு) ஆகியோர் பங்கேற்கவில்லை.
அதேவேளையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ப.செந்தில்நாதன் (47-வது வார்டு) பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.