கோவை அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறி வடவள்ளி காவல் நிலையத்தை திமுகவினர் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
கோவை வடவள்ளி காவல் நிலையத்தை திமுகவின் பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர். அவர்கள் கூறியதாவது:
கோவை பொம்மண்ணாபாளையம் நாராயணசாமி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சுயஉதவிக் குழுக்கள் என்ற பெயரில் கூடிய அதிமுகவைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு ரூ. 750 ரொக்கம் கொடுத்துள்ளனர்.
அதே பகுதியில் வசிக்கும் எங்கள் கட்சியினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக அதிமுகவைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையம் வந்தோம் என்றார்.
இதையடுத்து, திமுகவினரிடம் வடவள்ளி காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனுவாக எழுதிக் கொடுக்குமாறும், சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்துவதாகவும் வாக்குறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.