படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பரபரப்பு

செய்திப்பிரிவு

மரக்காணம்: தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாநகராட்சிகளின் மேயர்களும் பதவியேற்று வர, கடலூர் மாநகராட்சியில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் ஓட்டலில் தங்கியிருந்த கடலூர் கவுன்சிலர்களை வாக்களிக்க விடாமல் போலீஸார் தடுப்பதாகக் கூறி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் ஓட்டலைச் சுற்றி விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சி தேர்தலில் 45 இடங்களில் 33 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. இன்று மேயர் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அதிருப்தி தெரிவித்து ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் 20 கவுன்சிலர்கள் நேற்று மதியம் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர். பில்லர் அனைவரும் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள ஓசன் ஸ்பிரே தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கடலூரில் 18 கவுன்சிலர்கள் ஐயப்பன் தலைமையில் மாயமான சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில். அவர்கள் தங்கி இருக்கும் ஓசன் ஸ்பிரே ஓட்டலில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கோட்டகுப்பம் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கடலூரில் வாக்களிக்க செல்வதற்காக புறப்பட்ட கவுன்சிலர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கவுன்சிலர்கள் மேயர் தேர்தலில் தங்களை வாக்களிக்க விடாமல் போலீஸார் தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளேயே கோசம் எழுப்பி உள்ளனர். மொத்தம் விலகியிருந்த 18 கவுன்சிலர்களின் எட்டு பேர் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தனித்தனியாக வெளியே சென்ற நிலையில். மீதம் 11 கவுன்சிலர்கள் ஓட்டலின் அறையிலேயே போலீஸார் முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை அறிவாலயத்தில் இருந்து முக்கிய நபர் ஒருவரும் புதுச்சேரி எதிர்கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான சிவாவும் ஹோட்டலுக்கு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தை சிறிது நேரம் ஹோட்டலின் வாசலில் நிறுத்திய போலீஸ் அதிகாரிகள் சிறிது நேரத்துக்குப் பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

இதனால் ஈசிஆர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஹோட்டலில் முன்பக்க வாசல்களிலும் பின்பக்கம் கடற்கரைக்கு செல்லும் வாசல்களிலும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஓட்டலின் உள்ளே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. திமுக மேயர் வேட்பாளருக்கு திமுக கவுன்சிலர்கள் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT