சென்னை: ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில், அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது அந்த கட்சியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருக்கும் நிர்வாகி, எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் தலைமையில் கூட்டம் நடந்ததாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்த மாவட்டத்தில் சுயபரிசோதனை செய்திருக்கலாம். அதன் விளைவாக அந்த கூட்டம் நடந்திருக்கலாம். ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்குத்தான் அமமுகமூலமாக செயல்படுகிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுகவை மீட்டெடுக்க முடியும்என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அந்த கட்சியில் இருந்துதான் இதுபோன்ற குரல்கள் கேட்கிறது. அதனால் அவர்கள்தான் சுயபரிசோதனை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.
அவர்கள் முடிவு எடுத்துவிட்டு வரட்டும். இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நான்எதுவும் கூற முடியாது. அமமுகதொண்டர்களின் விருப்பத்தை நிர்வாகிகள் மூலம் தெரிந்துகொண்டுதான் முடிவெடுக்க முடியும்.
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி காரணமாகக்கூட, எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் திமுகவை வலுவாக எதிர்க்க முடியும் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர என் சுவாசம் உள்ளவரை போராடுவேன். எனது இந்த பயணத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
வலுவான இயக்கமாக மாறி ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக என்ற தீயசக்தியை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.