நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது, அதன் கடைசி தலைவர் பதவியை பாஜக கைப்பற்றி இருந்தது. மாநகராட்சியாக தரம் உயர்ந்ததும், முதல் மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
52 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 என, திமுக கூட்டணி வசம் 32 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக சார்பில் மேயர் வேட்பாளராக மகேஷ், துணை மேயர் வேட்பாளராக மேரி பிரின்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக 11, அதிமுக 7, சுயேச்சைகள் 2 இடங்களில் வென்றுள்ளனர். மேயர் தேர்தலில் பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்த்து 18 உறுப்பினர்களே உள்ளனர்.
இதனிடையே, துணை மேயர் பதவி காங்கிரஸுக்கு அறிவிக்கப்படாததால், திமுக கூட்டணிக்குள் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, தென்தாமரைகுளம் பேரூராட்சியில் காங்கிரஸ் உறுப்பினரை, பாஜக கவர்ந்ததால், திமுக தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்தது. அதற்குள், நாகர்கோவில் மேயர் தேர்தலுக்கு பாஜகவினர் மேற்கொள்ளும் முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.