ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் புதர்காடுகள் எரிந்து சாம்பலாகின.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், வில்லோனி பள்ளத்தாக்கில் கவர்கல் பகுதியில் வனத்துறை வேட்டைத் தடுப்பு முகாமுக்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று காட்டுத் தீ பற்றியது. காய்ந்த புற்களில் தீப்பற்றியதாலும், காற்றின் காரணமாகவும் பல நூறு ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியது. தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். காட்டுத் தீயால் வனப்பகுதியில் பல நூறு ஏக்கர் புதர்காடுகள் எரிந்து சாம்பலாகின.
இது குறித்து வில்லோனி எஸ்டேட் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வனப்பகுதியில் உள்ள புதர்காடுகளுக்கு தீ வைத்ததாக கருதப்படும் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனப்பகுதியில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் பீடி, சிகரெட் போன்றவற்றை காய்ந்த புல்வெளியில் வீசக்கூடாது. வனத்துக்கு தீ வைப்பது இந்திய வன உயிரின சட்டம் (1972) ன் படி குற்றமாகும். தீ வைப்பவர்களுக்கு சிறை தண்டனை பெற்று தரப்படும்” என்றனர்.