தமிழகம்

முக்கிய துறைகளில் சாதனை படைத்த டாக்டர் சாந்தா, நடிகர் ரஜினிகாந்த் சானியா மிர்சாவுக்கு பத்ம விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட 56 பேருக்கு நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் முக்கிய துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு கடந்த குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ல், மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி, முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், நடிகர்கள் அனுபம் கெர், அஜய் தேவ்கன், பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் மற்ற 56 பேருக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்ம விபூஷண்

எளிமையாக நடந்த இந்த விழாவில் விஞ்ஞானியும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான வி.கே.ஆத்ரே, நடிகர் ரஜினிகாந்த், இந்துஸ்தானி பாடகி கிரிஜா தேவி, பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

பத்ம பூஷண்

பாடகர் உதித் நாராயண், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வில், சின்மயா மிஷன் தலைவர் சுவாமி தேஜோமயானந்தா, நாடக கலைஞர் ஹைஸ்னம் கண்ணய்யாலால், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

பத்ம ஸ்ரீ

நடிகை பிரியங்கா சோப்ரா, விளையாட்டு வர்ணனையாளர் சுஷில் தோஷி, எழுத்தாளர் திரேந்திரா நாத் பேஸ்பரூவா, சுற்றுச்சூழல் காப்பாளர் சைமன் ஓரான், வழக்கறிஞர் உஜ்வல் நிஹாம், ஜவுளி வடிவமைப்பாளர் ஸ்ரீபாஸ் சுபாகர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT