தமிழகம்

எம்சாண்ட் ஏற்றிச்செல்லும் லாரிகளால் காற்று மாசு: பட்டுப்புழு உற்பத்தி தொழில் பாதிப்பதாக விவசாயிகள் புகார்

செய்திப்பிரிவு

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் காற்று மாசு காரணமாக பட்டுப்புழு உற்பத்தித் தொழில் பாதிப்புக்குள்ளாகி வருவதாக, தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் எம்.செல்வராஜ், மாநில செயலாளர் என்.பொன்னுசாமி, பொருளாளர் வி.கனகராஜ் ஆகியோர் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அம்மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடுவே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக, விவசாய நிலங்களின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் எம்.சாண்ட் ஏற்றிச்செல்லப்படுகிறது. புகை மண்டலம்போல காற்றில் பரவும் எம்சாண்ட் துகள்கள் பட்டு வளர்ப்புக்காக நடவு செய்யப்பட்டுள்ள, மல்பெரி செடிகளின் மீது படர்கிறது. இதனால் பட்டுப்புழு உற்பத்தி குறைந்துவிட்டது. எனவே, எம்சாண்ட் ஏற்றிய லாரியின் மேற்பரப்பில் தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாகவோ அல்லது அதன் தூசு காற்றில் பரவுவதை தடுக்கும் வகையில் தார்ப்பாய் அமைத்தோ பாதுகாப்புடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT